

சமூக, பண்பாட்டு, அரசியல், கலாசாரத் தளங்களில் சினிமா ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நீண்ட காலமாகவே பேசப்பட்டும், கதைக்கப்பட்டும் வருகிறது. எமக்கான சினிமா குறித்து பேசப்படும் அளவுக்கு அதனை நடைமுறையில் செயல்முறைப் படுத்துவது தொடர்பில் முயற்சிகள் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்படும் சிறிய முயற்சிகளோடு அது நின்று போகின்ற ஒரு நிலைமையே தொடர்ந்தும் இருந்து வருகிறது. இந்நிலையில் ‘இஸ்லாத்தின் புதிய அலை’ (Islamic New Wave) என்ற INW Studios இன் உருவாக்கம் காலத்தின் தேவை கருதிய ஒன்று என்றே சொல்லலாம். INW Studios நிறுவனம் குறித்த சில அம்சங்களை வாசகர்களோடு இங்கு பரிமாறிக்கொள்ளுகின்றோம்
உங்களுக்கு Tom Cruise யார் என்று தெரியுமா? Sharu khan யார் என்று தெரியுமா? உலகளவில் மிக அதிகமாக அறியப்பட்டவர்கள் வரிசையில் இவர்களும் உள்ளடங்குகிறார்கள். ஹொல்லிவூட் நட்சத்திர நடிகரான டொம் க்ரூஸ் உலகின் நானூறு கோடி மக்களாலும், பொலிவூடின் முடிசூடா மன்னனான ஷாருக்கான் இரு நூறு கோடி மக்களாலும் அறியப்பட்டிருக்கிறார்கள். மனித குலத்தின் விடிவுக்காக உழைத்த தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகளை விட, கனவுலகில் சில மணி நேரம் பார்வையாளனை மெய் மறக்கச் செய்கின்ற சில நடிகர்கள் கூடதலான மக்களால் அறியப்படுவது வேடிக்கையானதுதான். சினிமா என்ற மகத்தான ஊடகத்தின் ஜனரஞ்சத்தன்மையையும், மனித உள்ளங்களில் தாக்கம் செலுத்தும் வல்லமை பெற்ற அதன் அதி சக்தி வாய்ந்த இயல்பையையும்தான் இது எடுத்துக்காட்டுகிறது.
உலகின் பட்டி தொட்டிகளில் வாழ்பவர்களை எல்லாம் சென்று அடையும் இந்த ஊடகத்தினால், தான் முன்வைக்க வந்த செய்தியை வெறும் சில மணி நேரத்திற்குள் மனித உள்ளங்களுக்கு இடம் மாற்றி விட முடிகிறது. ஒரு இயக்குனனதும், கதாசிரியனதும் கைகளில்தான் சினிமா எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அம்சமே தங்கி இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் சினிமா என்பது ஒரு கருவி மட்டும்தான். அதன் இயக்குனனின் நோக்கத்தைப் பொறுத்துதான் சினிமா என்பது ஒரு நல்ல சாதனமா? அல்லது தீமையானதா? என்பதை தீர்மானிக்க முடியும்.
துரதிஷ்ட வசமாக இன்றைய சினிமா கலாசாரம் மேற்குலகையும், அதன் சித்தாந்தங்களையும் சூழத்தான் உருவாகி இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். மேற்குலகு தனது கலாசாரத்தை மற்ற சமூகங்கள் மீது புகுத்தும் ஒரு நுட்பமான, ஆனால் பலமான ஆயுதமாக இன்று நவீன கால சினிமா பரிணாமம் பெற்றிருக்கிறது. இலட்சியமோ, நோக்கமோ இல்லாத மேற்குலகின் வாழ்க்கை முறை, அவர்களின் கைகளில் சிக்குண்ட சினிமாவினால், உலக மக்களின் இலட்சியமாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதனால், ஏற்பட்ட பாதகங்கள் கொஞ்சனஞ்சமல்ல.
உலகமயமாக்குதலின் ஒரு கருவியாக இன்று மாற்றம் பெற்றிருக்கும் ஹொல்லிவூட் சினிமா, மேற்கின் சித்தாந்தத்தை இன்று எம்மீது திணிப்பதற்கு மிகக் கவனமான திட்டமிடலுடன் பயன்படுத்தப்படுகிறது. நிர்வாணம், வன்முறை உள்ளிட்ட மேற்கு நாகரிகத்தின் அசிங்கமான பக்கங்கள் இதன் மூலம் நம் இளைஞர்களுக்கு நாகரிகம் என்ற போர்வையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இஸ்லாத்தின் அதி முக்கிய கருத்தியல்களான இறையிருப்பு, ஒழுக்கம், கற்பு என்பன கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. இன்றைய நவீன சினிமா அதி நவீனத்துவம் எனப்படும் அரிஸ்டோட்டில் முன்வைத்த ‘நவீன சிறுபராயம்’ என்ற அம்சத்தை நோக்கிய அழைப்பையே விடுக்கிறது. இதன் மூலம் மனிதனை நிர்வாண நிலைக்கு கொண்டு செல்வது இவர்களின் நோக்கமாகும். இதன் மூலம் மனித சமூகம் பண்பாட்டு, கலாசார வேலிகளை தாண்டி இவர்களின் பாசையில் சுதந்திரத்தை நோக்கி வர வேண்டும் என்பதே இவர்களது விருப்பம். இந்த நோக்கத்திற்காக நவீன சினிமாவை மேற்குலகம் மிகவும் திட்டமிட்ட வகையில் பயன்படுத்தி வருகிறது.
டார்வினின் பரிணாம வாதம் உள்ளிட்ட பல்வேறு சித்தாந்தங்களுக்குமான பொது மக்கள் ஆதரவை திரட்டும் ஒரு கருவியாகவும் சினிமாவை மேற்கு நாகரிகம் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் பெயரளவில் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருந்தாலும், ‘மேற்கின் அகீதாவை’ ஏற்றுக்கொண்டவர்களாக எமது இளம் சமூகம் மாறி வருகிறது. பேரறிஞர் அபுல் ஹசன் அலி நத்வியின் வார்த்தையில் சொல்வதானால், இவ்வாறு உருவாகுபவர்களை ‘நவீன முர்தத்கள்’ என்றும் சொல்லலாம்.
இன்றைய நவீன சினிமாக்கள் கலாசார, பண்பாட்டு ஆயுதம் மட்டுமல்ல; மிகப்பலமான அரசியல் ஆயுதமும் கூட. நவீன சினிமாவின் மொழி முஸ்லிம்களை கொச்சைப்படுத்துவதாகவும், முஸ்லிம்களையும், அரபுக்களையும் நாகரீகமற்றவர்களாகவும் முரடர்களாகவும் சித்தரிக்கப்பதாகவுமே உள்ளது. இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் பயங்கரவாதிகளாக இன்றைய நவீன சினிமாக்களில் சித்தரிக்கப்படுகின்றனர். நவீன சினிமாக்களின் அரசியல் பரிமாணம் தொடர்பாக மற்றொரு கட்டுரையில் அலசுவோம்.
எவ்வாறாயினும், உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு சனத்தொகையை கொண்டிருப்பினும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை இத்துறையைப் பொறுத்த வரை உள்ள ஈடுபாடு மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. இலங்கை சூழலில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு முயற்சிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், இத்துறையில் ஈடுபாடு முழுமையாக இல்லை என்றே சொல்லலாம். இஸ்லாத்தை முன்வைக்கும் முயற்சிகள் கூட மிகப் பலமான இந்த ஊடகத்தை மறந்து விட்டுத்தான் அமைந்துள்ளன. குறைந்த பட்சம் மேற்கு சினிமாக்களுக்கு மாற்றீடாக எமது இளம் சந்ததிகளுக்கு வழங்கத்தக்கத்தக்க ஒரு சில சினிமாக்கள் தானும் எம்மிடத்தில் கிடையாது.
எமது சமூக சூழலை யதார்த்தத்தோடு அணுகினால் இது இன்றைய எமது இன்றியமையாத தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனாலும், மறுபுறத்தில், இத்தகைய முயற்சி ஒன்றை மேற்கொள்வதில் பல்வேறு சவால்களும் இருக்கவே செய்கின்றன. முக்கியமாக நிதி வளம் மிக முக்கியமாக வந்து நிற்கிறது. அத்தோடு பயீற்றப்பட்ட நடிகர்களோ, இந்தத் துறைசார்ந்த நிபுணர்களோ எமது சமூகத்தில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறார்கள். சினிமா தொடர்பில் சமூகத்தின் கருத்துக்களும் கூட இத்துறையின் வளர்ச்சிக்கு சாதகமாக காணப்படவில்லை. நவீன சினிமா ஏற்படுத்தும் தீங்குகள் குறித்து அறிந்தவர்கள் கூட நடைமுறைச் சார்த்தியமற்ற வகையில் சினிமாவே அற்ற ஒரு உலகை உருவாக்க ஆசைப்படுகிறார்களே அன்றி, ஒரு மாற்று சினிமாக் கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை இவர்களிடத்தில் இல்லை. இவற்றை எல்லாம் தாண்டி முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் கூட, அவையும் சர்வதேச அளவிலான போட்டியை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இது ஒரு சவாலான பணி என்பதில் சந்தேகமில்லை.
அந்த வகையில், இந்தச் சவால்கள் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும் என்ற உறுதியான நம்பிக்கையோடு பலவருட கால ஆய்வுகள், மற்றும் முன்னேற்பாடுகளோடு களத்தில் குதித்திருக்கிறது INW Studios நிறுவனம். ‘The Teacher’ என்ற பெயரில் முன்மாதிரி ஆசிரியரை மையமாக வைத்த திரைப்படத்தை தனது கன்னி முயற்சியாக ஆரம்பித்திருக்கும் INW Studios இஸ்லாமிய வரையரைகளைத் தாண்டாமல், சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளையும், செய்திகளையும் வழங்கும் சினிமாக்களை தயாரிப்பதன் ஊடாக பண்பாட்டில் உயர்ந்த சமூகத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாற்று சினிமாக்கலாசாரத்தை உருவாக்க முடியும் என்பது அதன் உறுதியான நம்பிக்கையாகும். சர்வதேச ரீதியாக ஒரு சிறந்த பண்பாட்டு விழுமியங்களையும், ஒழுக்க மாண்புகளையும் கொண்ட ஒரு உலகை உருவாக்க முடியும் என அது மிக உறுதியாக நம்புகிறது.
பல இஸ்லாமிய கலைஞர்களும், நடிகர்களும் இதற்காக உருவாகுவதன் மூலமும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் இவ்வேலையை செய்வதற்கு பல INW க்கள் உருவாக்குவதன் மூலம் மாத்திரமே சினிமா என்கின்ற இம்மாபெரும் ஊடகத்தை எமது கைகளுக்குள் கொண்டு வந்து, எமது பெருமானங்களை உலகின் நாகரிகமாக காட்டுவ்தன் மூலமே இவை சாத்தியப்பட முடியும் என நம்பும் INW Studios, இது குறித்து சீரியசாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்த விரும்புகிறது.